ராசிபுரம் அருகே ரூ.2.20 கோடி மதிப்பில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி: இன்று (ஆக.21) அடிக்கல் நாட்டு விழா கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தகவல்
ராசிபுரம் அருகே ரூ.2.20 கோடி மதிப்பில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி: இன்று (ஆக.21) அடிக்கல் நாட்டு விழா கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தகவல்;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.20 கோடி மதிப்பில் புதியதாக பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம் கட்டப்படும் என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் புதன்கிழமை தெரிவித்தார். ராசிபுரம் ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் ரூ.2.20 கோடி மதிப்பில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா ஆக.21-ல் நடைபெறுகிறது. இதில் தமிழக சிறு, குரு, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று அடிக்கல் நட்டு வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குகிறார். இதனை தொடர்ந்து அங்காடி அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்த கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., செய்தியாளர்களிடம் மேலும் பேசியது: தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுவளர்ச்சித் துறை, பட்டு விவசாயிகள், பட்டுநூற்புத் தொழில்முனைவோர்கள்,பட்டு வளர்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு செயல்பட்டு வருகிறது.‘பட்டுவளர்ச்சித் துறை’ சேலத்தை தலைமையிடமாக கொண்டு ஈரோடு, தருமபுரி, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து மண்டல அலுவலகங்கள் மூலமாக பட்டு வளர்ச்சி செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. பட்டுத் தொழில் மேற்கொள்ளச் செய்வதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், பட்டுத்தொழிலின் பல்வேறு வாய்ப்புகள் வழியாக கிராமப்புற மகளிருக்கு அதிகாரமளித்தல், கிராமப்புற மற்றும் புறநகர் மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்பாடு அடையச் செய்தல், இறக்குமதிக்கு மாற்றான வெண்பட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் நாட்டிலேயே வெண்பட்டு உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக உருவாகுதல் போன்ற தொலைநோக்கு குறிக்கோள்களை அடைய பட்டுவளர்ச்சித் துறை தொழில்மேம்பாட்டுக்கு என செயல்பட்டு வருகிறது. நாமக்கல் உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3172 ஏக்கர் பரப்பளவில் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூலம் மல்பெரி நடவு செய்து, பட்டுவளர்ப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு சராசரியாக மாதந்தோறும் ஒரு லட்சம் முட்டைத்தொகுதிகள் வரை வளர்க்கப்பட்டு சராசரியாக 80,000 கிலோ பட்டுக்கூடுகள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் தருமபுரி, சேலம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தமிழக முதல்வர் பட்டு விவசாயிகளின் நலன் கருதி, இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை உள்மாவட்டத்திலேயே சந்தைப்படுத்த ஏதுவாக கடந்த 2021 ஆம் ஆண்டு ராசிபுரம் பகுதியில் அரசு பட்டுக்கூடு அங்காடி நிறுவ உத்தரவிட்டார். இந்த பட்டுக்கூடு அங்காடி தொடங்கப்பட்டதில் இருந்து, மாதம் தோறும் சராசரியாக 10 ஆயிரம் கிலோ என்ற அளவில் தற்போது வரை சுமார் 400 டன் அளவிற்கு பட்டுக்கூடுகள் ரூ.16.49 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியானது போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் பட்டுக்கூடு அங்காடியினை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகமாக மேம்படுத்திட திட்டமிடப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டது. அதன் அடிப்படையில், ரூ.2.20 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு, ராசிபுரம் ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் கட்டுவதற்கு ஆக.21-ல் அடிக்கல் நடப்படுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று அடிக்கள் நட்டு வைக்கின்றனர். மேலும் 147 விவசாயிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பட்டு வளர்ப்பு கருவி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் வழங்கப்படவுள்ளது. மேலும், புதிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தில் இ-டிரேடிங் (e-auction) முறையில் பட்டுக்கூடு ஏலம் நடத்திடும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வர்த்தகமானது 4 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுகூடு உற்பத்திக்கு நல்ல விலை கிடைப்பதோடு, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். ராசிபுரம், புதிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்திட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், ராசிபுரம், புதிய ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தில் புதிய பட்டுநூற்பு அலகு மற்றும் பட்டு முறுக்கு அலகு ஆகியவை நிறுவிடும் திட்டங்களும் பட்டுவளர்ச்சித் துறையால் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். ராசிபுரம் அட்மா குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) க.நிஷாந்தி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.