தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 23 பவுன் நகைகள் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!!

ஆறுமுகநேரியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2025-08-17 08:17 GMT
ஆறுமுகநேரியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் இம்மானுவேல் விஜயன் (56). தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லா மெர்லி­ன். இத்தம்பதியின் 2 மகன்களும் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனர். இத்தம்பதி கடந்த வியாழக்கிழமை (ஆக. 14) சென்னையிலுள்ள உறவினர் விட்டுக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை, இவரது வீட்டுக்கு எதிரேயுள்ள கடைக்கு அவரது தாயும், தம்பி மகளும் சென்றனர். அப்போது, இம்மானுவேல் விஜயன் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோக்கள் உடைக்கப்பட்டு, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து இம்மானுவேல் விஜயனுக்கும், ஆறுமுகநேரி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  உதவி ஆய்வாளர் முத்து, போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் ஆய்வாளர் அருணாச்சலம், உதவி ஆய்வாளர் பழனிசெல்வி ஆகியோர் தடயங்களை சேகரித்தனர். மர்ம நபர்கள் வியாழக்கிழமை நள்ளிரவு கதவை உடைத்து வீடு புகுந்து 188 கிராம் நகைகள், 275 கிராம் வெள்ளிப் பொருள்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்hகத் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Similar News