நாமக்கல் மாதேஸ்வரன் எம்பிக்கு 24×7 போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் கொமதேகவினர்
நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் குரு இளங்கோ தலைமையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு அளித்தனர்.;

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி குறித்து தவறான தகவல்களை பரப்பி வருபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், எம்.பிக்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், கொமதேகவினர் மாவட்ட எஸ்.பியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் குரு இளங்கோ தலைமையில் அக்கட்சியினர் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: கொமதேக கட்சியின், நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளரும், நாமக்கல் லோக்சபா எம்.பியுமான மாதேஸ்வரனின் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மாற்று கட்சியைச் சேர்ந்த சிலர் இது குறித்து போஸ்டர்களை அச்சடித்து ஒட்டியுள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் மாதேஸ்வரன் எம்.பி. மீது தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சிலர் மாதேஸ்ரவன் எம்.பி.யை மிரட்டும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 9ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நாமக்கல் மாவட்டம், பொட்டணம் கிராமத்தில் உள்ள எம்.பி. மாதேஸ்வரன் தாயார் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் அவரது தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மேலும் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் அவரது தாயார் சேமித்து வைத்திருந்த தொகை உள்பட பல பொருட்கள் தீ விபத்தினால் சேதம் அடைந்தது.எனவே தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் எம்.பி., குறித்து சோஷியல் மீடியாக்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டு வரும் மாற்றுக்கட்சி நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாதேஸ்வரன் எம்.பிக்கு முழு நேரமும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.