சேலத்தில் 25 மையங்களில் திறனறித்தேர்வு நடைபெற்றது
தேர்வெழுதிய மாணவ, மாணவிகள்
அரசுப்பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கப்படும். திறனறித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திறனறித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் திறனறித்தேர்வு நேற்று நடைபெற்றது. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளி, ஆண்கள் பள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 25 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை, மாலை என 2 நேரம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 937 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி காலையில் நடைபெற்ற தேர்வில் 527 பேர் தேர்வு எழுத வரவில்லை. மதியம் நடைபெற்ற தேர்வில் 540 பேர் கலந்து கொள்ளவில்லை. தேர்வுகள் பலத்த கண்காணிப்புடன் நடைபெற்றது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் உத்தரவின் பேரில் அறை கண்காணிப்பாளர், முதன்மை கண்காணிப்பாளர், பறக்கும் படை அலுவலர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.