கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான இடுபொருட்கள் விநியோகம் !
கோவை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மானிய விலையிலான இடுபொருட்கள் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.;

கோவை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மானிய விலையிலான இடுபொருட்கள் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் மாநில அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. சித்திரை பட்டத்திற்குத் தேவையான நெல், சோளம், உளுந்து, பயறு வகைகள் மற்றும் உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விநியோகம் செய்யப்படவுள்ள இடுபொருட்கள் நெல் - 3,850 கிலோ, சோளம் - 12,183 கிலோ, உளுந்து - 18,779 கிலோ, நிலக்கடலை - 18,939 கிலோ, துவரை - 2,004 கிலோ, கம்பு - 1,556 கிலோ, பச்சை பயறு - 1,210 கிலோ விதைகள் மற்றும் 12.5 டன் மக்காச்சோள விதைகள் அடங்கும். மேலும், 2.5 கிலோ குளோரோபைரிபோஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி ஆகிய உயிர் உரங்களும், களைக்கொல்லி உள்பட இதர பயிர் பாதுகாப்பு மருந்துகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் இந்த மானிய விலையிலான இடுபொருட்களைப் பெற்று தங்களது விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இடுபொருட்கள் இருப்பு மற்றும் விநியோகம் தொடர்பான மேலும் விவரங்களை அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.