செல்லப்பம்பட்டி அரசு பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! ஆசிரியர்கள் "செல்லமாக" பிரம்படி கொடுத்து வரவேற்றனர்!
ஆசிரியர்கள் தங்களது முன்னாள் மாணவர்களை குடும்பத்துடன் அழைத்து நலம் விசாரித்து ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து பழைய கால நினைவுகளை நினைவூட்டி மகிழ்ந்தனர்.;
செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1998-2000ம் ஆண்டில் படித்த அனைத்து பாடப்பிரிவு முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்துடன் 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிறைவில் சந்தித்து கொண்டனர்.முன்னாள் மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் "செல்லமாக" பிரம்படி கொடுத்து வரவேற்பு அளித்தனர்..தலைமையாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார்.தொடர்ந்து, முன்னாள் மாணவ, மாணவியர், தங்களது பழைய நினைவுகளை, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.மேலும்,தங்களது குடும்ப நிலவரம், தாங்கள் வகிக்கும் பதவி, பொறுப்பு குறித்தும் பரிமாறிக்கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தற்போது, மருத்துவர்களாக, பொறியாளராக, ஆசிரியர்களாக, காவலர்களாக, ஆர்.ஐ.,யாக மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் தலைமையாசிரியர் சுந்தரம், முன்னாள் ஆசிரியர்கள் அல்லிமுத்து, பெரியண்ணன், சரஸ்வதி, ஜெகதீசன், வரதப்பன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, சந்தன மாலை மற்றும் சால்வை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அதேபோல், முன்னாள் மாணவ, மாணவியர் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது முன்னாள் மாணவர்களை குடும்பத்துடன் அழைத்து நலம் விசாரித்து ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து பழைய கால நினைவுகளை நினைவூட்டி மகிழ்ந்தனர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் பணியாற்றி வருபவர்கள் கூகுள் மீட் மூலம் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர் சங்க பிரதிநிதிகள் பத்மாவதி,சந்திரா,சங்கீதா, மோனிகா, ரமேஷ்,துரைமுருகன்,தட்சிணாமூர்த்தி,சுரேஷ், சதிஷ், மணிகண்டன், மணிவண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.இந்த சந்திப்பையொட்டி 1980,1990ம் ஆண்டில் பிரபலமான, கடலை மிட்டாய், பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.