கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளிடம் ஆட்சியர் ச.உமா கலந்துரையாடல்
குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் 15.09.2023 அன்று தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000/- பெற தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து மடல் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்ட போது, வடுகப்பட்டியில் மகளிரிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000/- கிடைப்பது குறித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து மடல் கிடைக்க பெற்றது குறித்து கலந்துரையாடிய போது, தங்களது வாழ்த்து மடலை மகிழ்ச்சியுடன் காண்பித்தனர்.