முதல்வர் மருந்தகம் அமைக்க 29-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இணைப்பதிவாளர் அறிவிப்பு

Update: 2025-01-22 04:02 GMT
சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொறுப்பு) ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற வகை மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் கடந்த சுதந்திர தின விழாவில் அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வருகிற 29-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு அரசு ரூ.1½ லட்சம் மற்றும் மருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1½ லட்சம் அளவிற்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News