பேராவூரணி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது

கைது;

Update: 2025-07-24 16:24 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் பல்வேறு  இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.  பேராவூரணி கடைவீதியில் கடந்த சில நாட்களாக கடைகள் , வங்கிகள், திருமண மண்டபங்கள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோனது. கடைவீதியில் வாகனங்கள் அடிக்கடி திருடு போவதால் பொதுமக்கள் வாகனங்களை கடைத்தெருவுக்கு கொண்டு வரவே அச்சப்பட்டனர்.  இந்நிலையில், பேராவூரணி காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம்  அரசர்குளம் பகுதியை சேர்ந்த உதயன்(50), முத்துநாகராஜ்(27), அஜித் (26)ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.  விசாரணையில் இரு சக்கர வாகனங்களை திருடிச்சென்று புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.  வாகனங்களை திருடிச்சென்று பழைய இரும்புக் கடையில் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். வாகனங்களை வாங்கும் பழைய இரும்பு கடைக்காரர் உடனடியாக திருடிக்கொண்டு வந்த சிலமணி நேரங்களிலேயே வாகனங்களை  தனித்தனியாக பிரித்து பழைய இரும்புக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.  பழைய இரும்புக் கடைக்காரரிடமிருந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களின்  உதிரிபாகங்களை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  வாகனங்களை  பறி கொடுத்தவர்களுக்கு  உதிரிபாகங்களை  எப்படி கொடுப்பது என தெரியாமல் காவல்துறையினர் குழப்பத்திலும், திருடர்களை பிடித்தும் வாகனங்கள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கலக்கத்தில் வாகனங்களை பறி கொடுத்தவர்களும் உள்ளனர்.

Similar News