கன மழையில் 3,000 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின

கன மழையில் 3,000 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஆகின;

Update: 2024-12-13 11:26 GMT
அரியலூர், டிச.13 - அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கன மழையில் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக டெல்டா பகுதியான திருமானூர், முடிகொண்டான், மஞ்சமேடு, அன்னிமங்கலம், திருவெங்கனூர், விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, கீழக்காவட்டாங்குறிச்சி, தா.பழூர், காசாங்கோட்டை, நடுவலூர் மற்றும் செந்துறை, அயன்தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. தொடர்ந்து கன மழை நீடிக்கும் பட்சத்தில்,நீரில் மூழ்க்கியுள்ள நெற்பயிர்கள் அழுகி பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடி வைப்பதற்கான வடிகால் வாய்க்கால் தூர் வாரப்படவில்லை என்றும், இதன் காரணமாக தண்ணீரை வடிய வைப்பதில் சிக்கல் நீடிப்பதாகாவும் விவசாயிகள் தெரிவித்தனர். மக்காச்சோளம்...தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் சாகுபடி செய்த மக்காச்சோள பயிரில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிய பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர் விடும் நிலையில், இருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையினால், வயல்களில் தண்ணீர் தேங்கி தண்டுகள் அழுகும் நிலை உள்ளது. இதனால் மகசூல் இன்றி நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதே போல் மேற்கண்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்களும் மழைநீரில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News