குறுவை நெற்பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் -மாவட்ட ஆட்சியர் 

பயிர் காப்பீடு;

Update: 2025-07-27 13:46 GMT
வேளாண்மைத் துறையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், எதிர்பாராமல் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில், குறுவை நெல், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு நடப்பு 2025 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ள ஷேமா பொது காப்பீடு நிறுவனம் மற்றும் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பயிர் காப்பீடு பதிவு செய்யும் பணி நடை பெற்று வருகின்றது. குறுவைப்பயிர் காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.752/- மட்டும் செலுத்த வேண்டும். கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும். கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இயற்கை காரணிகளால் விதைப்பு செய்ய இயலாத நிலை, நடவு அல்லது விதைப்பு பொய்த்து போதல், மழை வெள்ளம் பாதிப்பு, அறுவடைக்கு பிந்தைய இழப்புகள் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், இழப்பீடு பெற வாய்ப்புள்ளது. பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கிராமத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற இயலும்.  ஆகவே விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் குறுவை விதைப்பு அல்லது நடவு சான்றிதழ் பெற்று தங்கள் குறுவை நெற்பயிரினை, ஜூலை 31 க்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் காப்பீடு செய்யும் பொழுது முன்மொழிவு படிவத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது விதைப்புசான்றிதழ், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டிலுள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் தெளிவான முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும்.  கட்டணத் தொகையை செலுத்திய பின்பு அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் குறிப்பாக கிராமத்தின் பெயரை சரிபார்த்து கொள்ளவேண்டும்.  பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2025-26 ம் ஆண்டிற்கான காரீப் பருவ குறுவைப்பயிருக்கு பயிர் காப்பீட்டுத் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேளாண் அடுக்கக விவசாயி அடையாள எண் கோரப்பட்டதை தவிர்க்க கோரி அளிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  எனவே, எப்போதும் நடைமுறையில் உள்ளவாறு வேளாண் அடுக்கக விவசாயி எண் இன்றி சொந்தப்பட்டாதாரரர்களும், குத்தகைதாரர்களும் விண்ணப்பித்து பயன் பெறலாம். எனவே, விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன் கூட்டியே ஜூலை 31க்குள் காப்பீடு செய்து கடைசி நேரத்தில் பதிவு செய்வதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் நெரிவித்துள்ளார்.

Similar News