சேலம் மாவட்டத்தில் 32 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டன.

முதல் விற்பனையை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-02-25 03:26 GMT
தமிழ்நாடு முழுவதும் நேற்று 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி சேலம் சின்னதிருப்பதி நகர கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றியதுடன் முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் 32 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு ஜெனரிக் மருந்துகள் 20 முதல் 90 சதவீதம் வரையிலும், பிற மருந்துகள் 25 வரையிலும் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. குறிப்பாக தொழில்முனைவோர் மருந்தகங்களுக்கு ரூ.3 லட்சம் மானியமும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்களுக்கு ரூ.2 லட்சம் மானியமும் வழங்கப்படுகிறது. ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலமாகவும், இதர மருந்துகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவை குறைக்கும் நோக்கத்துடன் தரமான மருந்துகள் குறைவான விலையில் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மீராபாய், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளர் பாலமுருகன், சேலம் உதவி கலெக்டர் அபிநயா, துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News