காவேரிப்பாக்கத்தில் டிராக்டரில் இருந்த 38 நெல் மூட்டைகள் திருட்டு
டிராக்டரில் இருந்த 38 நெல் மூட்டைகள் திருட்டு;
காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கிட சரவணன் (வயது 45), விவசாயி. இவர் கடந்த வாரம் கோ 51-ரக நெல் அறுவடை செய்து, அதை விற்பனை செய்வதற்காக சிறுகரும்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. இதனால் தனக்கு சொந்தமான 69 நெல் மூட்டைகளுடன், பெரியகரும்பூர் சந்திப்பு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் டிராக்டரை நிறுத்தி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிவரை நெல் மூட்டைகளுக்கு காவல் இருந்து விட்டு, இரவு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, டிராக்டரில் இருந்த நெல் மூட்டைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சரிபார்த்ததில் 69 மூட்டைகளில் 38 மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.