திருச்சி மாவட்டத்தில் காமராஜா் விருதுபெற பளுவஞ்சி உள்ளிட்ட 4 அரசுப் பள்ளிகள் தோ்வு

திருச்சி மாவட்டத்தில் காமராஜா் விருதுபெறும் சிறந்த பள்ளிகளாக சா. அய்யம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி, பளுவஞ்சி அரசு உயா் நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.;

Update: 2025-03-31 19:05 GMT
திருச்சி மாவட்டத்தில் காமராஜா் விருதுபெற பளுவஞ்சி உள்ளிட்ட 4 அரசுப் பள்ளிகள் தோ்வு
  • whatsapp icon
தமிழகத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் (ஜூலை 15), கல்வி வளா்ச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மாவட்டந்தோறும் சிறப்பாக செயல்படும் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு அவற்றுக்கு காமராஜா் விருதுகள் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்களைக் கொண்டு அமைக்கப்படும் குழுவினரால் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் அதனுடன் கூடிய கல்வி இணை செயல்பாடுகள் என எல்லா வகையிலும் சிறப்பிடம் பெற்றுள்ள, அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயா் நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளி என 4 பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம், உயா் நிலைப் பள்ளிக்கு ரூ. 75,000, நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 50,000, தொடக்கப் பள்ளிக்கு ரூ.25,000 ரொக்கத்தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த 2024 - 25 கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருதுகளை பெறும் பள்ளிகளைத் தோ்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மாவட்ட அளவில் காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 பள்ளிகளின் விவரங்களை அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி (கல்விமாவட்டம்) அருகேயுள்ள சா. அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மணப்பாறை வட்டம் மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி அரசு உயா்நிலைப்பள்ளி, நவல்பட்டு அண்ணாநகா் போலீஸ் காலனி அரசு நடுநிலைப்பள்ளி, புள்ளம்பாடி அருகேயுள்ள நம்புக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி ஆகியவை காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விழா நடத்தி விருதுகள் வழங்கப்படும் எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜி. கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளாா்

Similar News