வேன் மோதி ஹோட்டல் உரிமையாளர் பலி 4 பேர் காயம்
சாலையோர விளம்பரப் பதாகை கம்பத்தில் வேன் மோதி விபத்து ஹோட்டல் உரிமையாளர் பலி மேலும் 4 பேர் காயம் மூலனூர் காவல்துறை விசாரணை;
கோவை மாவட்டம் கணுவாயை சேர்ந்தவர் இளங்கோ (வயது 48). ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் வேனில் சிவகங்கையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அதே வேனில் கோவை திரும்பினார். வேனை இளங்கோ ஓட்டினார். வேனில் இளங்கோவின் மனைவி புவனா (35), மகன் தருண் (3) மற்றும் உறவினர்கள் ராணி (35), ஆஸ்டின் (45) ஆகியோர் இருந்தனர். இவர்களது வேன் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தது. கோனேரிப்பட்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள விளம்பர பதாகை கம்பத்தில் வேன் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த புவனா, தருண், ராணி மற்றும் ஆஸ்டின் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மூலனூர் போலீசாரும், அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் கோவையில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.