அரசு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியில் விடுதி ஒதுக்கீட்டில் தாமதம் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற முடிவு

குமாரபாளையம் அரசு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியில் விடுதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டு வருவதால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-07-26 08:45 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பு ஆண்டிற்கான வகுப்புகள் ஜூலை 3ல் துவங்கியது. இதில் பல வெளியூர் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் விடுதி வசதி கேட்டு விண்ணப்பம் செய்து பல நாட்கள் ஆகியும், இதுவரை விடுதியில் சேர அனுமதி கிடைக்காமல் இருந்து வருகிறது. இதனால் தொடர்ந்து கல்வியை தொடர முடியாமல் டி.சி. கேட்டு வருகின்றனர். விசைத்தறி தொழில் மிகுந்த குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி ஏழை மாணவ, மாணவியர் கல்லூரி கல்வி பயில ஏதுவாக, முன்னாள் அமைச்சர் தங்கமணியின் முயற்சியின் பேரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்திரவின் பேரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. எந்த நோக்கத்திற்காக இந்த கல்லூரி அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத வகையில், ஏழை மாணவ, மாணவியர் கல்லூரியில் தொடர்ந்து கல்வி பயில முடியாமல் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து பெற்றோர் தரப்பில் சாதிக் என்பவர் கூறியதாவது: கல்லூரியில் வகுப்புகள் தொடங்கி 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இன்னும் விடுதி தராமல் இருந்தால், வெளியூர் மாணவர்கள் எங்கு, எப்படி தங்கி, கல்லூரிக்கு வந்து படிக்க முடியும். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர், கல்லூரி மாணவர்கள் விடுதியில் சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்கள் ஆகிக்கொண்டே செல்வதால், வேறு கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில, டி.சி. கொடுத்து உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News