தென்காசியில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் 40 கிராம மக்கள் மனு
மாவட்ட ஆட்சியரிடம் 40 கிராம மக்கள் மனு
தென்காசி மாவட்டம் மேலநீலதநல்லுர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 40 கிராமங்களைச் சேர்ந்த கோவில் பொறுப்பாளர்கள் சேதுதுரை தலைவர், சுப்பையா பூசாரி, செந்தூர்பாண்டியன், ராமசாமி, சேதுதுரை, சண்முகையா, மூக்கையா, செந்தில் ஆகியோர் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: - தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலதநல்லூர் பகுதியில், மானூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலதநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்காக அரசு சார்பில் மலகசடு மேலாண்மை சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு ஆலயங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. நீர்நிலைகள் அமைந்துள்ள இந்த இடத்தில் மலகசடு மேலாண்மை சுத்திகரிப்பு மையம் அமைந்தால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் கெட்டு துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படும். மேலும் இந்த பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் நீர்நிலைகளில் இருந்தே ஆலயங்களுக்கு தண்ணீர் எடுத்து வரும் நிலை இருப்பதால் கோவிலின் புனித தன்மை கெடும் நிலை உள்ளது. எனவே இங்கு அமையவுள்ள மலக்கசடு மேலாண்மை சுத்திகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.