உடுமலையை சேர்ந்தவரிடம் 5 கோடி நிலம் மோசடி- பரபரப்பு புகார்
சார்பாதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ராஜூ என்பவர் 45 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்க அமராவதி வெங்கடேஸ்வரா பேப்பர் மில் நிர்வாகத்துக்கு முன்பணமாக வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆலை நிர்வாகம் குறிப்பிட்ட காலத்தில் இடத்தை பதிவு செய்து கொடுப்பதாக ராஜுவிடம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ராஜ்வை ஏமாற்றும் வகையில் வேறொரு நபருக்கு அதே 45 ஏக்கர் விவசாய நிலத்தை பதிவு செய்ய ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தகவல் அறிந்த ராஜு நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் நிலம் அமைந்துள்ள பழனி தாலுகா கீரனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்ததை கூறி முறையிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று நிலத்தை பதிவு செய்ய ஆலை நிர்வாகம் வேறொரு நபரை அழைத்து வந்ததை அறிந்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ராஜு சென்றுள்ளார். சார் பதிவாளர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சனைக்குரிய இடம் என்பது தெரிய வந்ததால் சார் பதிவாளர் பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது . ஒரே இடத்தை இரண்டு நபர்களுக்கு விற்க ஆலை நிர்வாகம் முயன்ற சம்பவம் கிரணூர் பகுதியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.