கோவை: கார் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கிய 5 பேர் கைது !
கார் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கிய 5 பேரை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.;

கோவை, புலியகுளம் மீனா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெரோம் அற்புதராஜ் (வயது 32). இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஜெரோம் அற்புதராஜ் தனது நண்பருடன் காரில் உக்கடத்தில் இருந்து புலியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை ஜெரோம் ஓட்டிச் சென்றார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேருடன் ஜெரோம் அற்புதராஜுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பேரும் மேலும் நான்கு பேரை வரவழைத்து காரை பின்தொடர்ந்து வந்தனர். திருச்சி சாலை சுங்கம் சந்திப்பு பகுதியில் வந்த போது 6 பேரும் சேர்ந்து ஜெரோம் அற்புதராஜ் காரை வழிமறித்து தாக்கினர். மேலும் அவர்கள் ஜெரோம் அற்புதராஜ் மற்றும் அவருடைய நண்பரை சரமாரியாக தாக்கியதுடன், கார் கண்ணாடியையும் உடைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து ஜெரோம் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜெரோம் அற்புதராஜை தாக்கிய கார் கண்ணாடியை உடைத்த உக்கடம் கோட்டைமேட்டை சேர்ந்த ருசீது, ஜாபர் சாதிக், முகமத் ஆசிப், முகமத் முஷாமில், முகமது நஸ்ருதீன் ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.