மதுரை மண்டலத்தில் வருமான வரி வளர்ச்சி விகிதம் -5.62 சதவீதம்

வருமான வரி;

Update: 2025-09-04 22:16 GMT
மதுரை மண்டலத்தில் வருமான வரி வளர்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிர்மறை வளர்ச்சியாக உள்ளது என வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையர் டி.வசந்தன்  தெரிவித்தார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: மதுரை மண்டலத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022 - 23 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் ரூ. 2.04 லட்சமாக உள்ளது. இது, தேசிய சராசரி தனி நபர் வருமானமான ரூ. 1.14 லட்சத்தையும், தமிழ்நாட்டின் சராசரி தனி நபர் வருமானமான ரூ. 1.96 லட்சத்தையும் விட அதிகம். என்றாலும், மதுரை மண்டலத்தில் கடந்த நிதியாண்டுக்கான (2024 - 25) வருமான வரி வளர்ச்சி விகிதம் -5.62 சதவீதமாக உள்ளது. இது அகில இந்திய வருமான வரி வளர்ச்சி விகிதமான 13.57 சதவீதத்தை விட மிகவும் குறைவு. இந்த மண்டலத்தில் ரூ. 6 ஆயிரத்து 293 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டது. இதில், ரூ. 3 ஆயிரத்து 521 கோடி திரும்ப வழங்கப்பட்டது. நிகர வருமான வரி வசூல் ரூ. 3 ஆயிரத்து 361 கோடியாக உள்ளது. இதனால், மதுரை மண்டலத்தில் வருமான வரி வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் ரூ. 921 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டது. இதில், ரூ. 677 கோடி திரும்ப செலுத்திய பிறகு ரூ. 243 கோடி மட்டுமே நிகர வருமான வரி வசூலாக உள்ளது. எனவே,  நிகழ் நிதியாண்டில், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த வரி செலுத்துவோர் தங்களது வருமான வரியை தாமாக முன் வந்து செலுத்த வேண்டும். மேலும், வருமான வரி படிவம் தாக்கல் செய்யும்போது உரிய ஆதாரங்களுடன் கூடிய வரி விலக்குகளை மட்டுமே கோரி திரும்பப் பெற வேண்டும். வருமான வரிச் சட்டம் 1962 கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் வருமான வரிச் சட்டம் 2025 நிறைவேற்றப்பட்டுள்ளது. பழைய சட்டத்தை விட, புதிய சட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை" என்றார் வசந்தன். இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வருமான வரி கூடுதல் ஆணையர்கள் ஆர். இராஜராஜேஸ்வரி (தஞ்சாவூர்), பி. ஸ்ரீதரன் (மதுரை), தஞ்சாவூர் துணை ஆணையர் ஜி. வெங்கடேசன், வருமான வரி அலுவலர்கள் ஜான் ரஸ்ஸல், தங்கம், ஜி.சாய்குமார், வில்விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படவிளக்கம்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய வருமான வரித் துறை மதுரை மண்டல முதன்மை ஆணையர் டி. வசந்தன். உடன் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர்.

Similar News