சேலத்தில் செல்போன் பேசியபடி நடந்து சென்ற மூதாட்டியிடம் 6½ பவுன் நகை பறிப்பு

மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2025-03-19 02:15 GMT
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீதாராமன். இவருடைய மனைவி ஷீலா (வயது 62). இவர் நேற்று ஸ்ரீராம் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். இந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். அந்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை திடீரென பறித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷீலா திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஷீலா அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News