சேலத்தில் தம்பதியை தாக்கி 6½ பவுன் நகை பறிப்பு
2 பேருக்கு போலீசார் வலைவீச்சு;
சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகரை சேர்ந்தவர் மாதவராஜ் (வயது 75). டிராவல்ஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து உள்ளார். இவருடைய மனைவி பிரேமா (65). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மகன் சென்னையிலும், மகள் கோவையிலும் உள்ளனர். வயதான தம்பதி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீடு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. இதில் வாலிபர்கள் சிலர் ஈடுபட்டனர். இந்த பணியில் ஈடுபட்ட வாலிபரும், மற்றொருவரும் நேற்று காலை 10.30 மணி அளவில் பிரேமாவின் வீட்டிற்கு சென்றனர். பின்னர் கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளனர். அப்போது அவர் இருவருக்கும் தண்ணீர் கொடுத்து உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் 2 வாலிபர்களும் பக்கத்து வீட்டு மாடிப்படி வழியாக ஏறி, பிேரமாவின் வீட்டிற்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு வேறு ஒரு அறையில் இருந்து வெளியில் வந்த பிரேமா 2 பேர் கணவரை மிரட்டுவதை பார்த்து கூச்சலிட்டார். அப்போது திடீரென ஒரு வாலிபர் பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தார். அதிர்ச்சி அடைந்த பிரேமா நகையை தன் கையால் பிடித்துக்கொண்டார். இருப்பினும் 2 வாலிபர்களும் சேர்ந்து நகைகளை பறித்தனர். இந்த இழுபறியில் ½ பவுன் நகை அறுந்து கீழே விழுந்தன. பின்னர் வாலிபர்கள் 2 பேரும் 6½ பவுன் நகையுடன் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து பிரேமா கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு தம்பதியை தாக்கி 6½ பவுன் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.