ஆன்லைனில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.6.50லட்சம் மோசடி
சேலம் அருகே ஆன்லைனில் வேலைவாய்ப்பு: ரூ.6.50லட்சம் மோசடி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஆன்லைனில் பகுதிநேர வேலைவாய்ப்பு தேடி வந்தார். அப்போது அவர், டெலிகிராமில் செயலியில் ஒரு தகவலை அறிந்து திரைப்படத்தை மதிப்பீடு செய்யும் வேலையை தேர்வு செய்தார்.
இதையடுத்து அவரை இணையதளத்தில் தொடர்பு கொண்ட ஒருவர், ஒரு திரைப்படத்தை அனுப்பி அதனை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த பணியை முடித்தவுடன் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.600 அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீண்டும் ஆன்லைனில் தொடர்பு கொண்டு ஒரு லிங்கை அனுப்பி எங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று தகவல் அனுப்பினார். இதை உண்மை என்று நினைத்த அவர், ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்து 264-ஐ முதலீடு செய்தார். ஆனால் அவர் கூறியபடி லாப தொகை திருப்பி அனுப்பவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த வாலிபர் இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குறிப்பிட்ட பணமானது குஜராத், மராட்டியம், அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள சிலரின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் யார்? எனவும், அவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.