உதவித்தொகையை உயர்த்த கோரி மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்: சென்னையில் 662 பேர் கைது
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 26 மையங்களில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு, அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் வில்சன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 87 பேர் கைது செய்யப்பட்டனர்.