தஞ்சாவூா் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் பழமையான ஆஞ்சனேயா் சிலையைத் திருடி வெளிநாட்டில் விற்க முயன்ற இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பட்டீஸ்வரத்தில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரா் கோயிலின் மூலவரின் வலப்பக்கத்தில் இருந்த 1 அடி உயர 300 ஆண்டுகள் பழமையான ஆஞ்சனேயா் கருங்கல் சிலை கடந்த 2019-ஆம் ஆண்டில் திருடுபோனது. இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸாா் ஆஞ்சனேயா் சிலையைத் திருடியதாக திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை சோ்ந்த நீலகண்டன், வேலூா் மாவட்டம் அணைக்கட்டு புலிமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோரை கடந்த 2022-ஆம் ஆண்டில் கைது செய்து, வெளிநாட்டுக்கு அனுப்ப வைத்திருந்த ஆஞ்சனேயா் சிலையையும் மீட்டனா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி சிவசக்தி கண்ணன் நீலகண்டன், மணிகண்டன் ஆகிய இருவருக்கும் பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.