வில்லுக்குறி : நாய் கடித்து 7 பேர் காயம் 

கால்நடைகளையும் குதறியது;

Update: 2025-07-03 12:31 GMT
குமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி பகுதிகளில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் தெரு நாய்கள் பெருகி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இவற்றை அகற்ற வேண்டும், தெருக்களில் இறைச்சி கழிவு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலர் செயல் அலுவலரிடம் மனு கொடுத்து வந்தனர்.  இந்த நிலையில் கீழப்பள்ளம் பகுதியில் தெரு நாய் ஒன்று அந்த வழியாக வந்தவர்களை கடித்து குதறிய சம்பவம் நேற்று நடந்துள்ளது.  பேரூராட்சி சுகாதார பணியாளர் உட்பட 3 பெண்கள், வாரியல் விற்பனை செய்ய அந்த வழியாக நடந்து வந்த வட மாநில இரண்டு தொழிலாளர்கள் உட்பட 4 ஆண்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர்.   கால்நடைகளையும் விட்டு வைக்காத வெறிநாய் அங்கு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளையும் கடித்து குதறி உள்ளது. இதில் ஒரு ஆட்டிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சதை கிழிந்து ரத்தம் சொட்டிய சம்பவமும் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News