மத்திய அரசைக் கண்டித்து தொழிற் சங்கத்தினர் சாலை மறியல்: 714 பேர் கைது

மத்திய அரசைக் கண்டித்து தொழிற் சங்கத்தினர் சாலை மறியல்: 714 பேர் கைது செய்தனர்.;

Update: 2025-07-10 08:50 GMT
அரியலூர், ஜூலை.10- மத்திய அரசைக் கண்டித்தும்,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் 714 பேர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளர் போன்ற நடமுறைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப் பட்ச ஓய்வூதியம் ரூ,9 ஆயிரம் என நிர்ணயம் செய்திட வேண்டும் விளைப் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலையை வழங்கி, மானியத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு மற்றும் பொதுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்திருந்திருந்தனர். அதன்படி புதன்கிழமை அரியலூர் அண்ணா சிலை அருகே திரண்ட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேரடி அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட 670 பேரை காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர். போராட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் ஆர்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலர் சௌந்தரராஜன், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலர் ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.இதே போல் ஜெயங்கொண்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கண்ட தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் 74 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில், விவசாய சங்க மாவட்டச் செயலர் ஆர்.மணிவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எ.கந்தசாமி, மாதர் சங்கம் மாவட்ட தலைவர் பி.பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டாலும், மக்களுக்கு பாதிப்பில்லாமல் மாவட்டத்தில் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் இயங்கின. கடைகள் திறந்திருந்தன.

Similar News