சேலத்தில் யானை தந்தங்களை விற்க முயன்ற 8 பேர் கும்பல் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-02-25 03:29 GMT
சேலத்தில் சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்வதாக மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் யானை தந்தங்களை விற்பனை செய்வோர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று சந்தேகத்தின்பேரில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அரியானூரை சேர்ந்த சக்திவேல் (வயது 48), பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் (76) என்பதும், இவர்கள் கேரளாவில் இருந்து யானை தந்தங்களை வாங்கி வந்து அதனை கருமந்துறை பகுதியில் வைத்து சிலருக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, யானை தந்தங்களை விற்க முயன்றது தொடர்பாக மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது, ஆத்தூர் பெரிய கல்வராயன்மலையை சேர்ந்த முரளி (28), விழுப்புரத்தை சேர்ந்த சங்கர் (35), பாலு (31), தர்மபுரியை சேர்ந்த ஜெகநாதன் (46), கள்ளக்குறிச்சி வெள்ளிமலையை சேர்ந்த ராஜீவ்காந்தி (34), ஆத்தூர் தென்னங்குடிபாளையத்தை சேர்ந்த இளங்கோவன் (56) ஆகிய 6 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள், ஒரு மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலம் யானை தந்தங்களை ரூ.1 கோடிக்கு பேரம் பேசி அதனை கருமந்துறை பகுதியில் சிலருக்கு விற்க முயன்றது வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் கேரளாவில் யாரிடம் இருந்து யானை தந்தங்களை வாங்கி அதனை எப்படி சேலத்திற்கு கடத்தி வந்தார்கள்? வனப்பகுதியில் யானைகளை கொன்றுவிட்டு தந்தங்களை பிடுங்கி மறைத்து வைத்து கடத்தி கருமந்துறையில் யாருக்கு விற்பனை செய்ய முயன்றனர்? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News