தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து, போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பல் தலைவன் உள்பட 8 பேர் கைது

கைது;

Update: 2025-08-07 15:03 GMT
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த கும்பலை கிழக்கு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவுப்படி கிழக்கு காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரங்கசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகர்,   தனிப்பிரிவு காவலர் அருண், தலைமை காவலர் சரனேஸ் மற்றும் காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த தஞ்சை கீழவாசலை சேர்ந்த முகமது அப்பாஸ் (வயது 22), பிரவீன் (28), அரவிந்த் (26), வெங்கடேசன் (20), அம்மாபேட்டை சேர்ந்த சந்தோஷ் குமார் (23), வண்டிக்கார தெருவை சேர்ந்த அபிஷேக்  (22), விஷ்வா ஆகிய 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். போதை மாத்திரை விற்பனை செய்வதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்டது யார். எங்கிருந்து போதை மாத்திரை வாங்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.  இந்த விசாரணையில் திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமான் நகரை சேர்ந்த ஜோ.நவீன்குமார் (33) என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்வதற்கு தலைவராக இருந்ததும் , தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மெடிக்கல் ரெப்பாக பத்தாண்டுகள் பணிபுரிந்ததும் தெரியவந்தது . இதனை தொடர்ந்து காவல்துறையினர் திண்டுக்கல்லுக்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த நவீன் குமாரை கைது செய்து அவரிடமிருந்து 600-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நவீன் குமாரை பாதுகாப்பாக தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து நவீன் குமாரிடம்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News