கோவை: 80 வயது மூதாட்டிக்கு உடனடி அறுவை சிகிச்சை உத்தரவு!
கண்ணில் ஒளி சேர்க்கும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் 80 வயது மூதாட்டிக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய ஆட்சியர் உத்தரவு.;
கோவை மாவட்டம் சூலூரில் நேற்று நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது, 80 வயது லட்சுமி என்ற மூதாட்டி கண்புரை நோயால் அவதிப்பட்டு இருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் பவன் குமார், உடனடியாக மருத்துவ உதவியும் அறுவை சிகிச்சையும் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மாநில அளவில் முதல் முறையாக, கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 21 முதல் 19 சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,011 பேர் பரிசோதிக்கப்பட்டு, 236 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 168 பேருக்கு அறுவை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோயும் 100க்கும் மேற்பட்டோருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்படும் இந்த செயல்திட்டம், மருத்துவ உதவிகள் அற்ற பலருக்கும் ஒளி வீசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.