சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை பட்ஜெட் குறித்து 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்
இதில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்;
ஒவ்வொரு மண்டலம் வாரியாக 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை தனி நிதிநிலை பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், நீலகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் தங்களது முக்கிய கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்தனர். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றனர்.