சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது
ரேஷன் அரிசி பறிமுதல்;
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினரை ஒருவரை கைது செய்தனர். சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளங்குளம் சோதனைச் சாவடியில், கடலோரக் காவல் படை துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் மஞ்சுளா மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பசாமி மற்றும் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டுமாவடியிலிருந்து சேதுபாவாசத்திரம் நோக்கி, சந்தேகத்திற்கிடமாக மொபட்டில் இரண்டு மூட்டைகளுடன் சென்றவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த சம்சுதீன்( 60) என்பதும், அவர் வைத்திருந்த இரண்டு மூட்டையில் ரேஷன் அரிசி மற்றும் எலெக்ட்ரானிக் தராசு இருப்பதும் தெரியவந்தது. விசாரணையில், அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து, அதனை விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும், மல்லிப்பட்டினத்தில் கடை ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மல்லிப்பட்டினம் கடையில் சோதனை செய்தபோது அதில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 902 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சம்சுதீனை கைது செய்து, சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையம் கொண்டுவந்து மேல்நடவடிக்கைக்காக தஞ்சாவூர் குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.