ரூ.1 கோடி மானியம் ஒதுக்கீடு: அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!

மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவு அரைக்கும் எந்திரம் வாங்குவதற்கு 2 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்குவதற்காக மொத்தம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் கீதாஜீவன் சட்டசபையில் அறிவித்தார்.;

Update: 2025-04-18 04:28 GMT
மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவு அரைக்கும் எந்திரம் வாங்குவதற்கு 2 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்குவதற்காக மொத்தம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் கீதாஜீவன் சட்டசபையில் அறிவித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் வருமாறு:- * தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படும் 43 ஆயிரத்து 131 சத்துணவு மையங்களில் பயன்பெறும் 42.71 லட்சம் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.61.61 கோடி கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். * தமிழ்நாட்டில் செயல்படும் சத்துணவு மையங்களில் 25 பயனாளிகளுக்கும் அதிகமாக பயன்பெறும் 25 ஆயிரத்து 440 சத்துணவு மையங்களுக்கு ரூ.9.66 கோடி மதிப்பில் எரிவாயு அடுப்புகள் புதிதாக வழங்கப்படும். * வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான எந்திரங்கள் வாங்கும்போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2 ஆயிரம் மகளிருக்கு மொத்தம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும். * பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு புத்தகங்கள் மற்றும் குறும்படங்கள் ரூ.1 கோடி செலவில் தயாரித்து வெளியிடப்படும். * கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்திலும், தர்மபுரி மாவட்டம் எரியூர் மற்றும் கடத்தூர் வட்டாரங்களிலும் 3 புதிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்கள் ரூ.1.53 கோடி செலவில் அமைக்கப்படும். * சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகம் வடசென்னை, தென்சென்னை என 2 மாவட்ட திட்ட அலுவலகங்களாக ரூ.59 லட்சம் செலவில் பிரிக்கப்படும். * சென்னை, காஞ்சீபுரம், தர்மபுரி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இயங்கும் சிறப்பு நீதிமன்றங்களில் ஒளி, ஒலி காட்சி வசதிகள், குழந்தைகளுக்குரிய உட்புற வசதிகள் மற்றும் கண்கவர் சுவர் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய குழந்தை நேய சூழல் மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்படும். மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். திருநங்கைகளுக்கு தங்கும் இல்லம் ‘திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் வழங்கிடும் முன்முயற்சியாக சென்னை, மதுரையில் அனுபவமிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அரண் எனும் திருநங்கைகளுக்கான தங்கும் இல்லங்கள் ரூ.64 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்' என அமைச்சர் கீதாஜீவன் சட்டசபையில் அறிவித்தார். மேலும் அவர், ‘இந்த இல்லத்தில் 25 நபர்கள் தங்கும் வகையில் உறைவிடம், ஆலோசனை, தொழிற்பயிற்சி, பொழுதுபோக்கு வசதிகளுடன் ஆதரவளிக்கும் சேவைகளும் வழங்கப்படும் என்றும், எந்தவொரு பாகுபாடின்றி திருநங்கைகள் ஒரு வாரம் முதல் 3 வருடங்கள் வரை தேவைக்கேற்ப இந்த இல்லங்களில் தங்கி பயன்பெறலாம்' என்றும் தெரிவித்தார்.

Similar News