சர்ச்சில் உணவு சாப்பிட்ட ஒருவர் பலி - 7 பேர் சிகிச்சைக்காக அனுமதி
ஆனைமலை பகுதியில் ஜெபவழிபாடு திருச்சபையில் இரவு உணவு சாப்பிட்ட நபர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை பகுதியில் குமரன் கட்டம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் பாப்பாத்தி அம்மாள் (எ) எஸ்தர் ராணி 62 வயது இவர் கடந்த 8 வருடங்களாக அதே பகுதியில் பெந்தகோஸ்தே திருச்சபை நடத்தி வருகிறார்.. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த திருச்சபையில் நாள் முழுவதும் ஜெப வழிபாடு செய்ய வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெப வழிபாடு முடித்துவிட்டு எட்டு நபர்கள் திருச்சபையில் இரவு உணவு சாப்பிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 70 வயது மூதாட்டி சிவகாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த சரவணக்குமார் 27 வயது, ராமச்சந்திரன் 30 வயது, நந்தினி 26 வயது மற்றும் மீனாட்சி 48 வயது உள்ளிட்ட ஏழு பேரை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த சிவகாமி என்பவரின் உடலை வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் இருந்து உடற்கூறு ஆய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. தகவல் அறிந்து வந்த ஆனைமலை காவல் நிலைய போலீஸ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.