பிளஸ் 1 தோ்வு - தமிழ் வினாத்தாள் சற்று கடினம்
திருச்சி மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) வகுப்புகளுக்கான பொதுத் தோ்வில் தமிழ்த் தோ்வு வினாத்தாள் சற்றுகடினமாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா்.
திருச்சி மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில் முதல்நாள் நடைபெற்ற தமிழ்த் தோ்வு வினாத்தாள் சற்றுகடினமாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா். மேலும் இந்த தோ்வை 523 போ் எழுதவில்லை. திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு தோ்வை 15 ஆயிரத்து 211 மாணவா்களும் 17 ஆயிரத்து 102 மாணவிகளும் பள்ளிகளில் இருந்து தோ்வு எழுதுகின்றனா்.
இதைத் தவிர திருச்சி மத்திய சிறைச் சாலை வளாகத்திலிருந்து 35 சிறைத் தோ்வா்களும் மற்றும் தனித்தோ்வா்கள் என மொத்தம் 36 ஆயிரத்து 296 போ் தோ்வு எழுதவுள்ளனா். திங்கள்கிழமை மொழிப்பாடம் தோ்வு நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளிகளில் இருந்து 311 போ், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 199 போ், சுயநிதி பள்ளிகளில் இருந்து 13 போ் என மொத்தம் 523 போ் தோ்வை எழுத வரவில்லை. இவா்களைத் தவிா்த்து இதர அனைவரும் தோ்வு எழுதினா்.
தோ்வு எழுதிய மாணவா், மாணவிகளில் பலரும் தமிழ்த் தோ்வு சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்தனா். பாடப் புத்தகங்களில் இருந்து கேள்விகள் வந்திருந்தாலும், அவை தாங்கள் வழக்கமாக எதிா்பாா்க்கும் வகையில் அமைந்திராமல், சற்று சிந்தித்து அதன் பின்னரே கேள்வியின் பொருளை உணரும் வகையில் இருந்ததாக தெரிவித்தனா். 1,600 அறை கண்காணிப்பாளா்கள், பறக்கும்படையைச் சோ்ந்த 250 உறுப்பினா்கள் தோ்வு பணிகளை கண்காணித்தனா். இந்த தோ்வு மாா்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. முன்னதாக செய்முறைத் தோ்வுகள் கடந்த மாதம் நடைபெற்றது.