10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இருவர் போக்சோவில் கைது

போக்சோ வழக்கு;

Update: 2025-03-08 15:45 GMT
ஒரத்தநாடு அருகே 10 வயது சிறுமிக்கு, நொறுக்குத்தீனி கொடுத்து ஏமாற்றி, பாலியல் தொல்லை அளித்த இருவரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் காவல் சரகத்திற்குட்பட்ட, ஒரு கிராமத்தை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது மாணவி, பள்ளியில் கடந்த இரண்டு நாளாக சோர்வாக இருந்துள்ளார். இதை கண்காணித்த பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, மாணவி தன்னிடம் இரண்டு பேர் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். உடனே, பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர். மகளிர் காவலர்கள் சிறுமியிடம் விசாரித்த நிலையில், ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (35), கருப்பன் மகன் முகிலரசன் (40), இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை எனத் தெரியவந்தது. காவல்துறை விசாரணையில், ராஜேஷ் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல், முகிலரசனுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார்.  மேலும், அப்பகுதி சிறுவர்கள், சிறுமிகளுக்கு, அவ்வப்போது நொறுக்குத் தீனி வாங்கிக் கொடுத்து பேசி வருவது வாடிக்கை. அத்துடன் பெண்களை ஆபாசமாக போட்டோ எடுத்தும் வந்துள்ளனர். அப்படியாக, 10 வயது சிறுமிக்கும் அடிக்கடி நொறுக்குத் தீனியை வாங்கிக் கொடுத்து, ராஜேஷ் மற்றும் முகிலரசன் இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.  இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்துறையினர் ராஜேஷ், முகிலரசன் இருவரையும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News