வாலிபரை வெட்டிய 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
கன்னியாகுமரி அருகே காதல் திருமணம் செய்தவரை அரிவாளால் வெட்டிய பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் உட்பட 7 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஸ்டார்லின் (24). பெயிண்டர். இவர் அந்த பகுதியில் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை எடுத்துச் செய்யும் ஜெயபால் என்பவரிடம் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஜெயபாலின் மகளை ஸ்டார்லிங் காதலித்து வந்தார். ஜெயபால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு ஸ்டார்லின் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு கடந்த 12 -10- 2018 அன்று காரில் சென்றார். அப்போது கோவளம் அருகே செல்லும்போது ஜெயபால் மற்றும் அவர் உறவினர்கள் துரைராஜ், தமிழ்ச்செல்வன், ஸ்ரீகிருஷ்ணன் செல்வம், அமர், வினோ, ஸ்ரீதேவ் ஆகியோர் ஸ்டார்லின் காரை வழிமறித்து, பின்னர் அவரை தாக்கி அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த ஸ்டார்லின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஸ்டார்லின் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹசன் முகம்மது, ஜெயபால் உட்பட ஏழு பேருக்கு தலா பத்து ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.