மாணவர்கள் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம்

2023-2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-04-24 08:05 GMT

முன்னேற்பாடு கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 2023-2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், இப்பணியில் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

ஒரு ஆசிரிய பயிற்றுநருக்கு இரண்டு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் அப்பள்ளிகளில் உள்ள உயர்கல்வி ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் விவரங்களை தொகுத்தல், ஆலோசனைகள் வழங்குதல், அனைவரும் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வரை தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு, உயர்கல்வியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை நடப்புக்கல்வியாண்டில் அதிகப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்டம் முழுமைக்கும் உள்ள 90 ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News