கரூர் மாவட்டத்தில் 93.59 சதவீதம் தேர்ச்சி.
கரூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று காலை வெளியாகின.
பள்ளி மாணவர்களுக்கு படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அரசு அறிவித்த இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொண்டனர். மேலும் சில மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிக்கு நண்பர்களுடன் நேரில் வந்து செல்போனில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 5,617 மாணவர்களும், 5,749 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 366 பேர் கலந்து கொண்டனர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி 5,133 மாணவர்களும், 5,505 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 638 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.59 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 91.38 சதவீதமும், மாணவிகள் 95.76 என மொத்தம் 93.59 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு 91.49 சதவீதமும் நடப்பாண்டில் 93.59 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாநில அளவில் 20வது இடமும் இந்த வருடம் மாநில அளவில் 13 வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது கரூர் மாவட்டம்.