11 மாதம் இரட்டை பெண் குழந்தைகள் உயிர் இழப்பு
இரண்டை பெண் குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிற நிலையில், இந்த சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் குழந்தைகளின் தாய் உள்ளிட்ட அவரது பாட்டியிடமும், நாட்டு மருந்து கொடுத்த வைத்தியர் சைதானியிடமும் விசாரணை;
பெரம்பலூர் அருகே நாட்டுமருந்து கொடுக்கப்பட்ட வயிற்று போக்கால் இரண்டு கைக்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கந்தசாமி(38), தனலட்சுமி(33) தம்பதியினர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு 8 வயதில் அகிலன் என்ற ஒரு மகன் உள்ளார். கந்தசாமி துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 11 மாதத்திற்கு முன்னர் இத் தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் ரேஷ்மா, தனுஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கடந்த சில தினங்களாக காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனலட்சுமி அவரது பாட்டி சாந்தியுடன் தனது இரண்டு பெண் கைக் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வாலிகண்டபுரம் கிராமத்தில் நாட்டு வைத்தியம் செய்து வரும் ஜெயாலுதீன் மனைவி சைதானி என்பவரை சிகிச்சைக்காக நேற்று அனுகியுள்ளார். இதனையடுத்து குழந்தைகளை பரிசோதித்த வைத்தியர் சைதானி அவர்கள் இருவருக்கும் நாட்டு மருந்து கொடுத்துள்ளார். வயிற்றுப்போக்கு நிற்காததால் குழந்தையின் தாயார் ஆங்கில மருந்தும் கொடுத்துள்ளார். நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட குழந்தைகளில் நேற்று மதியம் 01:30 மணி அளவில் ரேஷ்மா என்ற குழந்தை மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தனலட்சுமி உள்ளிட்ட அவரது பாட்டி மற்றொரு குழந்தை தனுஸ்ரீயை உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் குழந்தை தனுஸ்ரீயும் இன்று அதிகாலை 01.30 மணியளவில் உயிரிழந்து விட்டது. இரண்டை பெண் குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிற நிலையில், இந்த சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் குழந்தைகளின் தாய் உள்ளிட்ட அவரது பாட்டியிடமும், நாட்டு மருந்து கொடுத்த வைத்தியர் சைதானியிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இரட்டை பெண் குழந்தைகள் நாட்டு மருந்து கொடுத்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.