11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக 07.08.2025 அன்று மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாக தரை தளத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது
11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக 07.08.2025 அன்று மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாக தரை தளத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.;
1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட “சுதேசி இயக்கத்தினை” நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் தனித்தன்மை, நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கைத்தறித் துறையின் பங்களிப்பு, கைத்தறி தொழிலினை ஊக்குவித்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி “11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் 07.08.2025 வியாழக் கிழமையன்று மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தின் தரை தளத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது. மேற்படி நிகழ்வினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். மேலும், நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் சுந்தரபாண்டியத்தில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து, “வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் நவீன ECG பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் சுமார் 850 நெசவாளர்கள் பயனடைவர். மேலும், கல்லூரி மாணவியர்களிடையே கைத்தறி இரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி “விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கலைக் கல்லூரியில்” நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.