112 அடி கிணற்றை காணவில்லை
112 அடி கிணற்றை காணவில்லை என கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்;
மாநில நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கிணற்றை மூடியதை எதிர்த்து மாநில சாலை பணிகளை நிறுத்த கோரியும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையில் அமர்ந்து விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ மாநில சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை மதுரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திடீரென 5 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளித்து வந்த ராஜ்குமார் என்ற விவசாயின் 112 அடி கிணற்றை மாநில சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மூடியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கிணற்றைக் காணவில்லை எனக் கூறி மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் எதிராக பதாகைகளை ஏந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.