மேலூர் ஒருபோக பாசனத்துக்கு 120 நாட்கள் நீர் திறப்பு - அரசு உறுதி

மேலூர் ஒருபோக பாசனத்துக்கு வைகை, பெரியாறு பாசன கால்வாயிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்' என உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-02-14 08:51 GMT
பாசன கால்வாய் 

மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'மேலூர் பகுதியில் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது வைகை அணை. இந்த அணையிலிருந்து மேலூர் பகுதி விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் வழங்க வேண்டும். வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. ஆனால், மேலூர் பகுதி விவசாயத்துக்கு 90 நாள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் 33 நாள் கடந்துவிட்டது. 120 நாள் தண்ணீர் தராவிட்டால் போதிய விளைச்சல் கிடைக்காது. விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்படும். அதிகாரிகள் தன்னிச்சையாக தண்ணீர் திறப்பை 120 நாளிலிருந்து 90 நாளாக குறைத்துள்ளனர். எனவே, வைகை அணையிலிருந்து மேலூர் பகுதிக்கு 120 நாள் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், தேவராஜ் மகேஷ் வாதிட்டனர். பெரியார் வைகை வடி நிலப் பிரிவு செயற்பொறியாளர் (நீர்வள அமைப்பு) சிவபிரபாகர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், தமிழக அரசு 14.11.2023-ல் பிறப்பித்த அரசாணைப்படி 15.11.2023 முதல் 10 நாட்களுக்கு பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் திருமங்கலம் ஒரு போக சாகுபடிக்கு குடிநீர் திறக்கப்பட்டது. பெரியாறு பிரதான கால்வாய் வழியாக 85,563 ஏக்கருக்கும், திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக 19,439 ஏக்கருக்கும் 90 நாட்களுக்கு நீர்வளத் துறையின் அசாணைப்படி 19.12.2023-ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 100 நாட்களுக்கு தண்ணீர் திறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைகை மற்றும் பெரியாறு அணைகளில் 18.03.2024 நிலவரப்படி நீர் இருப்பை பொறுத்து மொத்தம் 120 நாட்களுக்கு ஒரு போக சாகுபடி பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News