மினி பஸ் மோதி பிளஸ் 2 மாணவர் பரிதாப சாவு
தூத்துக்குடியில் பைக் மீது மினி பஸ் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
விபத்தில் பலி
தூத்துக்குடி செல்சிலி காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் நிக்கோ ஹேமு (17), மில்லர்புரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று மாலை இவர் பைக்கில் வீட்டிலிருந்து புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அண்ணா நகர் மேம்பாலம் அருகே வரும்போது பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாளமுத்து நகர் நோக்கி சென்ற மினி பஸ் இவரது பைக்கின் பின்புறம் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு மாணவர் நிக்கோ ஹேமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மத்திய இன்ஸ்பெக்டர் (பொ) முத்துராமன் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மினிபஸ் டிரைவர், தருவைகுளம் துரைசாமிபுரத்தை சேர்ந்த காளிமுத்து மகன் பொய்யாளி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.