15-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள்
சேலத்தில் ஆர்ப்பாட்டம்;

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றக்கோரி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் நல்லப்பன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராஜ்குமார், பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், பேரவை தலைவர் ராசு உள்பட பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அனைத்து தொழிற்சங்கங்களை ஒன்றாக அழைத்து பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை அரசே நேரடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் டிரைவர்கள், கண்டக்டர்களை பணியில் அமர்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.