அனுமதியின்றி இயங்கி வந்த 15 ஆழ்துளை கிணறுகளுக்கு 'சீல்'

பூந்தமல்லியில், உரிய அனுமதியின்றி இயங்கிய, 15 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய் துறையினர் 'சீல்' வைத்தனர்.

Update: 2024-06-14 08:23 GMT

சீல் (பைல் படம்)

பூந்தமல்லி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மோட்டார்கள் வாயிலாக லாரிகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக புகார் வந்ததை அடுத்து, பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில், அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் அணுகு சாலையில், உரிய அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மோட்டர் வாயிலாக லாரிகளில் தண்ணீர் ஏற்றியது கண்டறியப்பட்டது.

அங்கிருந்த 15 ஆழ்துளை கிணறுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களை அகற்றிய அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டால், அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர். 'ஆண்டுதோறும், இப்பகுதியில் விதிமுறை மீறி செயல்படும் ஆழ்துளை கிணறுகளை வருவாய் துறையினர் அகற்றுவதும், சில வாரங்களில் மீண்டும் சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. 'இந்த நடவடிக்கையும் அப்படி பெயருக்காக இல்லாமல், நிரந்தரமாக இருக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News