மதுபோதையில் வாகனம் இயக்கிய 15 பேர் லைசென்ஸ் ரத்து
சேலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 15 பேரின் லைசென்ஸை ரத்து செய்து போக்குவரத்து துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Update: 2024-02-12 14:46 GMT
சேலம் சரகத்தில் வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கு மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொது மக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு,10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாகன விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மாதம் போதையில் வாகனம் ஓட்டிய 15 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 22 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்றனர்.