வாபஸ் வாங்காத வேட்பாளர்கள் - தேர்தல் அலுவலர்களுக்கு புது குடைச்சல்
நீலகிரி மக்களவை தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் நோட்டாவுக்காக கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி (108) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 239 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 வி.வி.பேட்., கருவி, கூடலூர் (109) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 224 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 268 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 291 விவிபேட் கருவி, குன்னூர் (110) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 226 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 271 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 293 விவிபேட் கருவி என நீலகிரி மாவட்டத்திலுள்ள 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு 825 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 894 வி.வி.பேட்., கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தலை ஒட்டி முதல் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் சீரற்ற மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டு, ஊட்டி பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் மண்டல குழுக்கள் அதனை வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வார்கள் என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நீலகிரியில் 16 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பதிவு இடம்பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. பொதுவாக 15 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பதிவுக்கு ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் போதுமானது. ஆனால் நீலகிரியில் 16 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பதிவு இருப்பதால், கடைசியில் இடம்பெற உள்ள ஒரு நோட்டா பதிவுக்காக 3 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய நீலகிரி மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடி மையங்களுக்கும் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. நோட்டாவுக்காக வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வர இருப்பது ஒருபுறம் சுவாரசியமாக இருந்தாலும் மற்றொருபுறம், தேர்தல் அலுவலர்களுக்கு கூடுதல் குடைச்சல் ஏற்பட்டுள்ளது.