நீலகிரி மக்களவை தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டி

நீலகிரி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க., உள்பட 16 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கடைசி நாளான நேற்று யாரும் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறவில்லை.16 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Update: 2024-03-31 00:44 GMT

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அவருக்கு வந்தது. வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா, அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் மற்றும் சுயேச்சைகள் உள்பட 27 பேர் 33 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 28ம் தேதி நடந்தது. 17 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று  யாரும் வாபஸ் பெறவில்லை. மனுக்களை வாபஸ் பெற மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் யாரும் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறவில்லை. இதனால் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா (தி.மு.க.,), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.,), எல்.முருகன் (பா.ஜ.க.,) மற்றும் 11 சுயேட்சைகள் என மொத்தம் 16 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் 10 பேர் போட்டியிட்டனர். இம்முறை 16 போட்டியிடுகின்றனர். போட்டியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் விவரம் வருமாறு:- 1.ஆ.ராசா (தி.மு.க.,)- உதயசூரியன், 2.கணேஷமூர்த்தி (பகுஜன் சமாஜ்) - யானை 3.எல்.முருகன் (பா.ஜ.க.,) -தாமரை 4.லோகேஷ் தமிழ்செல்வன் (அ.தி.மு.க.,)- இரட்டை இலை, 5.பத்திரன் (இந்திய கணசங்கம்)- வெண்டைக்காய் 6.மலர்மன்னன் (சாமானிய மக்கள் நலக்கட்சி) - மோதிரம் 7.ஜெயக்குமார் (நாம் தமிழர்) - ஒலிவாங்கி (மைக்) 8.ஜெயந்தி (அம்பேத்கர் பார்டி ஆப் இந்தியா) - மேல் அங்கி 9. அன்புகுரு (சுயேட்சை)- படகோட்டியுடன் கூடிய பாய்மரப்படகு 10.கிருஷ்ணகுமார் (சுயேட்சை)- மின் கம்பம் 11.சதீஷ் (சுயேட்சை)-மடிக்கணினி 12.செல்வன் (சுயேட்சை)- வைரம் 13.தனபால் (சுயேட்சை)- கிரிக்கெட் மட்டை 14.முருகன் (சுயேட்சை)- காலிபிளவர் 15.முருகேசன் (சுயேட்சை)-திராட்சை 16.விஜயகுமார் (சுயேட்சை)-தலைக்கவசம்

Tags:    

Similar News