சிவகங்கை மாவட்டத்தில் 162 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
சிவகங்கை மாவட்டத்தில் 162 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஆஷா அஜித் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் திருமயம் மற்றும் ஆலங்குடி என்ற தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்றன. இது தவிர காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன.
ஆறு தொகுதிகளிலும் சேர்த்து 16 லட்சத்து 23 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1873 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவைகளில் 48 வாக்குச்சாவடிகள் மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் 90 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக 162 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன.
பாராளுமன்ற தேர்தலில் ஒட்டி 155 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தேர்தலை ஒட்டி பறக்கும் படை, கண்காணிக்கும் படை, உள்பட 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 36 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை மற்றும் சிவிஜில் செயலி ஆகியவைகளின் மூலம் தெரிவிக்கலாம். இது தவிர 1950 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்